தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Tuesday, 17 October 2023

வருடத்தில் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் சிவன் கோவில்

 



கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வயநாடு செல்லும் சாலையில் வனப்பகுதியில் அமைந்துள்ளது கொட்டியூர் என்ற ஊர். இந்த தலத்திற்கு திருசேருமன்னா என்ற பெயரும் உண்டு. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதாக சொல்லப்படும் இடம் இது தான். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த இடம் என்பதால் கூடியூர் என அழைக்கப்பட்டு, பிறகு கொட்டியூர் என்று மாறி உள்ளது. கொட்டியூர் மட்டுமல்ல இதனை சுற்றி உள்ள பல ஊர்களும் தட்சன் நடத்திய யாகத்துடன் தொடர்புடையவை என சொல்லப்படுகின்றன.


தட்சனின் யாகத்திற்கு வந்த பார்வதி தேவி அதை தூரத்தில் இருந்து கண்ட இடம் நீண்டு நோக்கி என்றும், தட்சனுடன் சண்டையிட்டு நீண்ட தூரம் நடந்து வந்ததால் நடை தளர்ந்த இடம் மந்தன்சேரி என்றும், தன்னை மதிக்காத தட்சனின் தலையை வெட்டிய பிறகு சிவ பெருமான் தனது வாளை வீசிய இடம் முதிரேரிக் காவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஊர் அக்கரை கொட்டியூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.


சிவனின் யாகத்தை அழித்த பிறகு சிவ பெருமான் தனது கோபம் தனிந்து சுயம்புவாக எழுந்தருளிய கோவில் தான் கொட்டியூர். இங்கு இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு இக்கரை கொட்டியூர், அக்கரைக் கொட்டியூர் என்று பெயர். இவற்றில் அக்கரை கொட்டியூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்படுகிறது. அதாவது வைகாசி மாதத்தில் நடைபெறும் மகோற்சவ காலத்தின் போது மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது.


மற்ற நாட்களில், சிவ பெருமானை அவமதிக்கும் வகையில் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் பாவம் தீருவதற்காக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். இந்த 28 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் சிவ பெருமானை தரிசிப்பதற்காக அமைக்கப்பட்ட கோவில் தான் இக்கரைக் கொட்டியூர் சிவன் கோவில். இந்த தலத்தை சுற்றிலும் கிட்டதட்ட 72 வரையிலான சிறிய கோவில்கள் உள்ளன.


அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் நடைபெறும் மகோற்சவத்தின் போது சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வாள் எழுந்நலத்து என்ற சடங்கு நடத்தப்படுகிறது. முதிரேரிக்காவிலும் சிவ பெருமானுக்கு கோவில் உள்ளது. மகோற்சவத்தின் முதல் நாளில் முதிரேரிக்காவிலிருந்து வாள் எடுத்து வரும் நிகழ்வே வாள் எழுந் நலத்து என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட பரம்பரையை சேர்ந்த ஒருவரே இந்த வாள் எடுப்பு நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.


வாள் எடுத்து வரும் நபர், முதிரேரிக்காவிலிருந்து வாளை எடுத்துக் கொண்டு கொட்டியூர் வரும் வரை எந்த இடத்திலும் நிற்காமல், தண்ணீர் கூட குடிக்காமலும் வாளேந்தியபடி கொட்டியூர் வரை வருவார். இந்த விழா மிகவும் உணர்ச்சி பூர்வமாக, காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் நடைபெறும்.


இந்த கோவிலுக்கு சொந்தமான ஆபரணங்கள் கரிம்பனக்கல் கோபுரம் என்னும் இடத்தில் உளக்ள பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டகத்தின் நான்கு சாவிகள் நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரிடமும் இருக்கும். இவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும். இந்த பெட்டகத்தை பாம்புகள் பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது. திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் இந்த ஆபரணங்கள் எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. இந்த கலசங்களுக்கு பண்ணாரம் என்றும், இந்த உற்சவத்திற்கு பண்ணாரம் எழுந் நலத்து வைபவம் என்றும் பெயர். இந்த வைபவத்தை நடத்துபவர்கள் குடிபதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


இந்த இடத்தை கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் குறிச்சியார் என்ற ஆதிவாசிகளே கண்டறிந்ததால், முதன் முறையாக பூஜை செய்வதற்காக இங்கு வரும் நம்பூதிரிகள் குறிச்சியார்களின் அனுமதி பெற்ற பிறகே கோவிலுக்குள் செல்ல முடியும். 14 சாதிகளை சேர்ந்த அவகாசிகள் ஒன்று கூடுவதற்கு அடியேந்திர யோகம் என்று பெயர். இந்த அடியேந்திர யோகம் நடைபெறாமல் கோவில் தொடர்பான எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதில்லை.


திருவிழா சமயங்களில் மட்டும் அக்கரை கொட்டியூரில் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை சுற்றிலும் குடில் அமைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறந்த வெளியிலேயே ஈசன் வாசம் செய்கிறார். பக்தர்கள் சிவனை வழிபடும் இடத்திற்கு திருவஞ்சரா என்று பெயர். இந்த இடத்தை எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர் தட்சனின் ரத்தம் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு அருகில் தட்சிண கங்கை என அழைக்கப்படும் பாவலி ஆறு ஓடுகிறது. பாலுகாய்ச்சி மலையில் உற்பத்தியாகும் பாவலி ஆற்றில் உள்ள கற்கள் அனைத்தும் சிவலிங்களாக எண்ணி பக்தர்களால் வழிபடப் படுகிறது.


தட்சனின் தலையை சிவ பெருமான் வெட்டியதன் நினைவாக ஓடப்பூ என்ற பூ கொட்டியூரில் விற்பனை செய்யப்படுகிறது. இது மூங்கில் மரத்தின் பூவாகும். கொட்டியூருக்கான பூவாக கருதப்படும் இந்த பூவை வாங்கி வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.


No comments:

Post a Comment